×

ராஜஸ்தானில் இன்று தேர்தல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மொத்தம் உள்ள 200 சட்டபேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 25ம் தேதி(இன்று) தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டு மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் அசோக் கெலாட், தனது ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் வெற்றி பெற்றால் 7 வாக்குறுதிகள் நிறைவேற்றுவேன் என்று கூறி பிரசாரம் செய்தார்.

பாஜ தலைவர்கள் தங்கள் பிரசாரத்தின் போது,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது, ஊழல் மற்றும் தாஜா செய்யும் அரசியலை அசோக் கெலாட் செய்வதாக குற்றம் சாட்டினர். பாஜ கட்சி 59 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கியுள்ளது. 7 சுயேச்சைகள் உட்பட 97 எம்எல்ஏக்களுக்கு காங்கிஸ் சீட் அளித்துள்ளது. மார்க்சிஸ்ட், ஆர்எல்பி,ஆம் ஆத்மி, ஒவைசி கட்சி உள்ளிட்ட கட்சிகளும் வேட்பாளர்களை இறக்கியுள்ள போதும், காங்கிரஸ்- பாஜ இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த சூழ்நிலையில், 199 சட்டபேரவை தொகுதிகளிலும் இன்று தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒன்றிய படைகளான சிஆர்பிஎப்,பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபிபி உள்ளிட்ட துணை ராணுவ வீரர்கள் , போலீசார் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 70 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்படுகிறது. மாநிலத்தில் நடக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் மற்றும் பாஜ என மாறி மாறி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நடைமுறையை மாற்றி காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது பாஜ மீண்டும் ஆட்சி அமைக்குமா என்பது வாக்கு எண்ணிக்கையின் போது தெரிய வரும்.

The post ராஜஸ்தானில் இன்று தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Election ,Rajasthan ,Jaipur ,Congress ,Chief Minister ,Ashok Khelat ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!!